பயங்கரம்... யு-டர்ன் எடுத்தபோது பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை மிதித்ததால் சொகுசு கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து!

 

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்தின் கீழ் உள்ள திருப்பத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு கார் ஒன்றை ஓட்டி வந்த வாலிபர் ஒருவர், மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் யு-டர்ன் (U-Turn) எடுக்க எத்தனித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தச் சாலையின் எதிர் திசையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்துள்ளது.

எதிரே வந்த பைக் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக அந்த இளைஞர் காரை உடனடியாக நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் பதற்றத்தில் பிரேக்கை மிதிப்பதற்குப் பதிலாக காரின் வேகத்தை அதிகரிக்கும் ஆக்சிலேட்டரை அவர் பலமாக அழுத்தியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்தச் சொகுசு கார், கண் இமைக்கும் நேரத்தில் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் மிக பலமாக மோதி அப்படியே நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

கார் தலைகுப்புற கவிழ்ந்து நொறுங்கிய போதிலும், அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டி வந்த வாலிபர் எவ்விதக் காயமுமின்றி மிக நூலிழையில் உயிர் தப்பினார். இந்த விபத்து நடந்த நள்ளிரவு நேரத்தில் அருகில் பொதுமக்கள் நடமாட்டம் யாரும் இல்லாததாலும் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துத் திருவல்லிக்கேணி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தின் காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.