பெரும் சோகம்... லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாப பலி!
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் யெல்லாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை 52 ல் உள்ள அரபியில் காட் பகுதி பாலகாரா கிராஸ் அருகே நள்ளிரவில் பயங்கர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. தார்வாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் உள்பட 9 பேர் கொண்ட குழுவினர் தங்களின் பல்நோக்கு சொகுசு வாகனத்தில் தர்மஸ்தலா மற்றும் சிக்கமகளூரு ஆகிய பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணமாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் அதிகாலை 1.30 மணியளவில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த அசுர வேக லாரியுடன் நேருக்கு நேர் மோதி சுக்குநூறாக நொறுங்கியது.
இந்த கோர விபத்தின் கோரத்தாண்டவத்தால் சுற்றுலா வாகனத்தில் பயணம் செய்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாகப் பலியாகினர். இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த யெல்லாப்பூர் போலீசார், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடியவர்களை மீட்டனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில், சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்ததால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்ற 2 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஹூப்பள்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். விபத்தில் பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள யெல்லாப்பூர் போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருவதுடன் விபத்துக்கான முழு முதற்காரணம் குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.