சரக்கு லாரி மீது ஆட்டோ  மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி... பெரும் சோகம்! 

 

 

தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் நேற்றிரவு சரக்கு லாரி மீது ஆட்டோ-ரிக்ஷா மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜஹீராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்வார் சந்திப்பில் இரவு சுமார் 8 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் சோகமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பீதர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மீது ஆட்டோ மோதியதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.