லாரி மீது சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் பலி!

 

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் ஏலூரு நோக்கி நேற்றிரவு 42 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் சொகுசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. காலை 9 மணியளவில் சூரியாபேட்டை கோதாடா எனும் ஊருக்கு செல்ல வேண்டிய சொகுசு பேருந்தை ஓட்டுநர் அதிவேகமாக இயக்கியுள்ளார். இன்று அதிகாலை 4 மணியளவில் கோதாடா அருகே துவாரகுண்டா எனும் இடத்தில் பேருந்து சாலை வளைவில் திரும்ப முயன்றுள்ளது.

அப்போது முன்னால் இரும்பு லோடுடன் பழுதாகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சின்னா (32), ஜோஷ்னா (29), நாகேந்திர பாபு (21) மற்றும் ஷாஹினா (30) உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த கோர விபத்தில் 20 பயணிகள் படுகாயமடைந்து கோதாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் மல்லிகார்ஜுனா தூக்க கலக்கத்தில் இருந்ததாகவும், அதிவேகமாக பேருந்தை இயக்கியதால்தான் விபத்து நடந்ததாகவும் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள கோதாடா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.