முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் ஜூன் மாத சாதனைகள்.. அதிரடித் திட்டங்களின் முழுத் தொகுப்பு!

 

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஜூன் மாதத்தில் பல்வேறு  ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளையும், பல முக்கிய மக்கள் நலத் திட்டங்களையும் அரசாணைகள் மூலம் அமல்படுத்தியுள்ளது. 

டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்தம்: ₹1,200 கோடி கூடுதல் வருவாய்

முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றவுடன் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த 717 மதுபானக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டார். மேலும், டாஸ்மாக் மதுபானப் பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை அதிகாரப்பூர்வமற்ற முறையில் கட்சி நிதி என்ற பெயரில் திசைதிருப்பப்பட்டு வந்த பெரும் தொகை, இனி நேரடியாக அரசு கணக்கில் மட்டுமே சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹாட், பீர் மற்றும் ஒயின் பெட்டிகளுக்கான கூடுதல் கட்டணங்கள் நேரடியாக அரசுக்குச் செல்வதால், ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பிற்கு 'சிங்கப்பெண் அதிரடி படை'

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை மாநிலம் முழுவதும் பலப்படுத்தவும் 'சிங்கப்பெண் சிறப்புப் படை' அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக ₹354 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

40 ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின் மலைவாழ் மக்களுக்குப் பேருந்து வசதி
போக்குவரத்து வசதிகள் ஏதுமின்றி கடந்த பல தசாப்தங்களாகத் தவித்து வந்த மலைவாழ் கிராம மக்களின் 40 ஆண்டுகால நீண்ட கோரிக்கையைத் தவெக அரசு ஜூன் மாதத்தில் நிறைவேற்றியுள்ளது. அம்மக்களின் அவசரத் தேவைகளுக்காகப் புதிய பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதோடு ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் 300 புதிய அரசுப் பேருந்துகளும் தற்பொழுது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ₹755 கோடி நிதி ஒதுக்கீடு

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களைக் கௌரவிக்கும் முகமாகவும், பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் விதமாகவும் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ₹755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏழை விவசாயிகளின் கடன் ₹75,000 வரை தள்ளுபடி

தமிழக விவசாயிகளின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில், தகுதி வாய்ந்த ஏழை எளிய விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களில் தலா ₹75,000 வரை தள்ளுபடி செய்வதாக தவெக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான நிதியையும் ஒதுக்கியுள்ளது.

தனியார் பள்ளி கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் தங்களின் ஆண்டு கல்விக் கட்டண விவரங்களைப் பெற்றோர்கள் எளிதாகப் பார்த்து அறிந்துகொள்ளும் வகையில், பள்ளி வளாகத்தின் முக்கிய அறிவிப்பு பலகையில் கட்டாயம் ஒட்ட வேண்டும் என அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூடப்பட்ட அம்மா உணவகங்கள் புதுப்பித்துத் திறப்பு

முந்தைய காலகட்டங்களில் போதிய பராமரிப்பின்றி கவனிக்கப்படாமல் சிதிலமடைந்திருந்த அல்லது மூடப்பட்டிருந்த அம்மா உணவகங்கள் அனைத்தும் தவெக அரசால் தரம் உயர்த்தப்பட்டு, முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டுள்ளன.

டெண்டர் முறையில் டிஜிட்டல் புரட்சி:
அரசுத் துறைகளில் ஒப்பந்த ஒதுக்கீட்டில் நடக்கும் ஊழல்களை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கையாக, அனைத்து அரசுத் துறைகளின் ஒப்பந்தப் புள்ளிகளும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாநிலக் கடன் நிலை குறித்த வெள்ளை அறிக்கை
முந்தைய திமுக ஆட்சியில் நிலவிய நிதி நிலவரம் மற்றும் மாநிலத்தின் மொத்தக் கடன் பொறுப்புகள் குறித்துப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, மாநிலத்தின் மொத்தக் கடன் பொறுப்புகள் சுமார் 13 லட்சம் கோடி ரூபாயாக உள்ள உண்மை நிலை விளக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்
கன்னியாகுமரி கப்பல் கட்டுமானத் திட்டம்: கன்னியாகுமரி பகுதியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான பணிகள் தற்பொழுது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் சுமார் 30,000 தமிழக இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த 21 கிலோமீட்டர் தூர மாரத்தான் ஓட்டப் பந்தயம் மாநில அரசால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

தவறு செய்த சொந்தக் கட்சி நிர்வாகிகள் நீக்கம்
அரசுப் பள்ளிகளிலோ அல்லது பொது இடங்களிலோ வரம்பு மீறி அத்துமீறலில் ஈடுபட்ட சொந்தக் கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனடியாகப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சலுகை கிடையாது என்பதை இந்த நடவடிக்கை மூலம் அரசு உணர்த்தியுள்ளது.