தன் கணவருடனான உறவை கைவிட மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீச்சு!
கணவருடனான தகாத உறவைக் கைவிட மறுத்ததால் ஆத்திரமடைந்த மனைவி, பழனிக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த அப்பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று ஆசிட் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சிவதாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (48). வெள்ளிப் பட்டறைத் தொழிலாளியான இவருக்கு ஜூலி (39) என்ற மனைவி உள்ளார். ஜெயக்குமாருக்கும், சேலம் பெரியபுத்தூரைச் சேர்ந்த வெண்ணிலா (40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் குறித்து அறிந்த ஜூலி, தனது கணவரையும் வெண்ணிலாவையும் கடுமையாகக் கண்டித்துள்ளார். இருப்பினும், அவர்கள் இருவரும் தங்களது பழக்கத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் வெண்ணிலா மீது கடும் ஆத்திரமடைந்த ஜூலி, அவரைப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார்.
தனது கணவரின் வெள்ளிப் பட்டறையில் கொலுசுகளைச் சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் 'சல்பியூரிக்' ஆசிட்டை ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டு தக்க சமயத்திற்காகக் காத்திருந்துள்ளார். ஜெயக்குமார், வெண்ணிலா ஆகிய இருவரும் பழனிக்குச் சாமி தரிசனம் செய்வதற்காகப் பேருந்தில் புறப்பட்டுள்ளனர். இதனை அறிந்த ஜூலியும், யாருக்கும் சந்தேகம் வராதவாறு அதே பேருந்தில் ஏறி இருவரையும் ரகசியமாகப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
பழனி பேருந்து நிலையத்தில் இறங்கிய ஜெயக்குமாரும் வெண்ணிலாவும் அடிவாரம் நோக்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்த ஜூலி, பழனி பூங்கா ரோடு பகுதியில் அவர்கள் சென்றபோது, கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த ஆசிட்டை எடுத்து வெண்ணிலாவின் பின்னந்தலையில் ஊற்றினார்.
ஆசிட் பட்டதில் பலத்த காயமடைந்த வெண்ணிலா வலியால் அலறித் துடித்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி அடிவாரம் காவல் நிலைய போலீசார், காயமடைந்த வெண்ணிலாவை மீட்டுச் சிகிச்சைக்காகப் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிட் வீச்சில் ஈடுபட்ட ஜூலியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.