லஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கை.. வாட்ஸ்அப், மின்னஞ்சல் மூலம் புகாரளிக்க தமிழக அரசு புதிய வசதி!

 

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பது தொடர்பாகப் பொதுமக்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி எளிமையாகவும், நேரடியாகவும் புகார் அளிக்கும் பொருட்டுத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை புதிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள், வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை அறிவித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அரசுத் துறைகளில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நோக்கில் இந்த எளிய புகார் அளிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் புகார்களை புதிய டிஜிட்டல் வழிமுறைகள் மூலமாகத் தெரிவிக்கலாம். 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு லஞ்சம் தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப் செய்தியாக அனுப்பலாம். dvac@nic.in என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கும் தங்களது புகார்களை விரிவாக எழுதி அனுப்பலாம்.

நேரடியாகத் தொடர்புகொண்டு புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள், லஞ்ச ஒழிப்புத்துறையின் 044-22321090, 044-22321085, 044-22310989, 044-22342142 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

அரசு அலுவலகங்களில் ஏதேனும் ஒரு பணிக்காக அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் லஞ்சம் கோரினால், பொதுமக்கள் உடனடியாக இந்தத் தொடர்பு எண்களைப் பயன்படுத்தித் தகவல் தெரிவிக்கலாம் என்றும், புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.