ஒரே நாளில் அதிரடி... தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முக்கிய அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கே.என்.நேரு அமைச்சராகப் பதவியில் இருந்த நகராட்சி நிர்வாகத் துறையில் டெண்டர் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், ஏற்கனவே அமைச்சருடன் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையை முடுக்கிவிட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் சுமாா் 40 இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்றது. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பரீசிலனை செய்தனர். சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. வட்டாட்சியர் மகேஸ்வரியின் அறை, அங்குள்ள கணினிகள் மற்றும் அலுவலகத்தின் முக்கியப் பதிவேடுகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். இச்சோதனைகள் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.