முதல் நாளே அதிரடி... இதுவரை ரூ.1.26 கோடி பறிமுதல்.. தமிழகம் முழுவதும் 2,106 பறக்கும் படைகள் வேட்டை - அர்ச்சனா பட்நாயக் தகவல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே, மாநிலம் முழுவதும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.26 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களைத் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நேற்று முதல் இன்று வரை, ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.26 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம் மற்றும் பொருட்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கண்காணிப்புப் பணிகளுக்காகத் தமிழகம் முழுவதும் 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகனத் தணிக்கையில் ஈடுபடுவார்கள். அரசியல் கட்சியினர் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பரப்புரையில் ஈடுபட வேண்டும் என்றார்.
மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். இதில் மார்ச் 31, ஏப்ரல் 3 மற்றும் ஏப்ரல் 5 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை என்பதால், அன்று மனுத் தாக்கல் செய்ய முடியாது. மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே மனுக்களைத் தாக்கல் செய்ய அனுமதி உண்டு.
வாக்குச் சாவடிகளுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. இருப்பினும், வாக்காளர்களின் வசதிக்காகச் செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்கச் சாவடிகளிலேயே பெட்டக வசதி (Lockers) செய்து தரப்படும்.
பறக்கும் படைகள் பொதுமக்களைத் தேவையின்றி தொந்தரவு செய்யக் கூடாது என்றும், உரிய ஆவணங்களைக் காட்டினால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடனடியாகத் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் அர்ச்சனா பட்நாயக் உறுதி அளித்துள்ளார். மேலும், ரொக்கப் பணம் மட்டுமின்றி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் (GPay, PhonePe போன்றவை) தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.