புதிய கூட்டணியில் நடிகர் அஜித்.. ‘பவர்அப்’ பிஸ்கட் விளம்பர தூதரானார்... தமிழ்நாட்டில் 9 புதிய பிஸ்கட் ரகங்கள் அறிமுகம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தொழில்முறை பந்தய வீரருமான அஜித்குமாரின் 'அஜித்குமார் ரேஸிங்' அணி, பிரபல ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'இண்டிபென்டன்ஸ் பவர்அப்' பிராண்டுடன் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளது.
கேம்பா எனர்ஜியைத் தொடர்ந்து புதிய ஒப்பந்தம்: ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘கேம்பா எனர்ஜி’ பானம், அஜித்குமாரின் கார் பந்தய அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராகச் செயல்பட்டு வந்தது. அந்த விளம்பரத்தில் அஜித்தின் தோற்றம் குறித்துச் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் மீண்டும் கைகோர்த்துள்ளார்.
புதிய ஒப்பந்தத்தின் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'இண்டிபென்டன்ஸ் பவர்அப்' பிஸ்கட் வகைகளுக்கான விளம்பர முகமாக நடிகர் அஜித்குமார் படம் இடம்பெற்றுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் இந்த இண்டிபென்டன்ஸ் பிராண்டின் கீழ் பவர் அப், மில்கி பவர், பட்டர் பிளிஸ், மேரி ப்ரைம், குளுக்கோஸ் பூஸ்ட், கோகோ, க்ரெம்யம் ஆரஞ்ச், க்ரெம்யம் சாக்கோ, கோகோ பர்பன் என 9 விதமான புதிய பிஸ்கட் ரகங்களைத் தமிழகச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த 9 பிஸ்கட் வகைகளும் நுகர்வோரின் வசதிக்கேற்ப ரூ.5 முதல் ரூ.125 வரை பல்வேறு அளவுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் வர்த்தகத் துறையை இணைத்து அஜித்குமார் மேற்கொண்டுள்ள இந்த புதிய கூட்டணி அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.