ஸ்பெயினில் சாதனைப் படைத்த நடிகர் அஜித்தின் 'ரெடாண்ட் ரேஸிங்' அணி!
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற புகழ்பெற்ற 24H பார்சிலோனா சாம்பியன்ஷிப் எண்டூரன்ஸ் கார் பந்தயத்தில், பிரபலத் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் ‘அஜித் ரெடாண்ட் ரேஸிங்’ அணி மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் தேசியக் கொடியை உயர்த்தும் வகையில் இந்த அணி பல்வேறு பிரிவுகளில் இடங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் சுற்றுகளில் ஒன்றான இத்தொடரின் GT3 Pro-Am பிரிவில் பங்கேற்ற நடிகர் அஜித்தின் அணி, கடும் போட்டியைக் கடந்து 2-வது இடத்தைப்பிடித்து மேடை ஏறி சாதனை படைத்துள்ளது.
உலக அளவில் பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி அணிகள் மோதிய இந்தப் பந்தயத்தில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் தரவரிசையில் 5-வது இடத்தையும், 'Constructors' சாம்பியன்ஷிப் பிரிவில் 3-வது இடத்தையும் இவ்வணி வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மெர்சிடிஸ் உள்ளிட்ட அதிநவீன பந்தயக் கார்களைக் கொண்டு நூதனமான முறையில் நடத்தப்பட்ட இந்த 24 மணி நேரத் தொடர்ச்சியான சவாலான போட்டியில், அஜித் தனது சொந்த அணியின் மூலமாகத் தொடர்ந்து சர்வதேச அளவில் கலக்கி வருவது இந்திய ரசிகர்களுக்கும் மோட்டார் விளையாட்டு வீரர்களுக்கும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் கடினமான ஐரோப்பியச் சுற்றுப்பாதைகளில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் நடிகர் அஜித்தின் இந்த அசாத்திய சாதனையைத் திரையுலகப் பிரபலங்களும், அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.