'முதல்வன்' படத்துடன் விஜய்யை ஒப்பிட்டு பேசிய நடிகர் அர்ஜுன்!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய் குறித்து, பாலிவுட் மற்றும் கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான கருத்துக்கள் தற்பொழுது இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.
தனது வரவிருக்கும் திரைப்படமான 'பிளாஸ்ட்' விளம்பர நிகழ்வின் ஒரு பகுதியாகப் பாட்காஸ்ட் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற போது அர்ஜுன் பேசியது வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'முதல்வன்' திரைப்படத்தில், ஒரே ஒரு நாள் முதலமைச்சராக வந்து ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் மாற்றும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்திருந்தது தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த அரசியல் மைல்கல் ஆகும். தற்போது நிஜ வாழ்க்கையில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதை அந்தப் படத்தோடு ஒப்பிட்டு அர்ஜுன் பேசுகையில், "நண்பர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, முதல்முறையாக அந்த அதிகாரப்பூர்வ சிஎம் நாற்காலியில் அமரப் போன அந்தத் தருணத்தை நான் டிவியில் பார்த்த போது, எனக்குத் தியேட்டரில் வெளியான என்னுடைய 'முதல்வன்' படம் தான் சட்டென்று நினைவுக்கு வந்தது. அதை என்னால் மறக்கவே முடியாது.
சினிமா துறையில் இருந்து, தன்னுடனே சக நடிகராகப் பயணித்த ஒரு நபர், கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராக நாற்காலியில் அமர்ந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல; அது மிகப்பெரிய சாதனை மற்றும் ஒட்டுமொத்தத் திரைத்துறைக்குமே பெருமையான விஷயம்" என்று அர்ஜுன் மிகவும் பெருமிதத்தோடு பாராட்டியுள்ளார்.
தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அர்ஜுன், "விஜய்யின் சிந்தனைகள் எப்போதும் ஆழமானவை. ஒரு நல்ல மனிதராகத் திரையில் நான் அவரை நன்கு அறிவேன். தற்பொழுது மக்கள் அவருக்குப் பெரிய பொறுப்பைக் கொடுத்துள்ளனர். அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. அவர் நிச்சயம் தமிழக மக்களுக்கு நல்ல பல திட்டங்களைக் கொண்டு வந்து சிறப்பான ஆட்சியைத் தருவார்" என்று தனது வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
சினிமாவில் 'முதல்வன்' படத்தில் சிஎம் ஆக நடித்த அர்ஜுன், நிஜ வாழ்க்கையில் சிஎம் ஆகியிருக்கும் தனது நெருங்கிய நண்பரான விஜய்யைப் பாராட்டிப் பேசியுள்ள இந்த வீடியோ, தற்பொழுது சோசியல் மீடியாக்களில் தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.