பாஜகவிலிருந்து விலகிய நடிகர் தேவன் தவெக-வில் இணைகிறாரா? - அரசியலில் புதிய நகர்வு!

 

கேரளாவைச் சேர்ந்த மூத்த நடிகரும் அரசியல்வாதியுமான தேவன், பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவியிலிருந்து அண்மையில் விலகிய நிலையில், தவெக கட்சியுடன் இணைந்து செயல்பட ஆயத்தமாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீ நாராயண குருவின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளுக்கு ஏற்பச் செயல்படவில்லை எனக் கூறி, கேரள பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவியையும் கட்சியின் முதன்மை உறுப்பினர் பொறுப்பையும் தேவன் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகள் நடிகர் தேவனை நேரில் சந்தித்து, அக்கட்சியின் கொள்கைகள் குறித்துப் பேசியதுடன் தவெக தலைவர் விஜய்யைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தனர்.

செப்டம்பர் 10-க்குப் பிறகு நடிகர் தேவன் சென்னை வந்து தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சந்திப்பிற்குப் பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தைத் தென்னிந்திய அளவில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், நடிகர் தேவனை தவெகவின் கேரள மாநிலத் தலைவராக அல்லது ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.