நடிகர் ஜெயமணி மறைவு... நடிகை அபிதா உருக்கம்!

 

பிரபல சின்னத்திரை மூத்த நடிகர் வி.சி.ஜெயமணியின் திடீர் மறைவு சின்னத்திரை உலகினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'திருமதி செல்வம்' தொடரில் அவருடன் இணைந்து நடித்த நடிகை அபிதா உருக்கமான இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

நடிகர் ஜெயமணியின் மறைவு குறித்து நடிகை அபிதா. "சுமார் 3 வாரங்களுக்கு முன்பு கூட அவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார். படப்பிடிப்புத் தளத்தில் மட்டுமின்றி எப்போதும் என்னை அன்போடு 'மருமகளே' என்றுதான் அழைப்பார்".

"நான் தற்போது கேரளாவில் இருப்பதால் அவரது மறைவுச் செய்தி எனக்கு தாமதமாகவே தெரியவந்தது. முன்பே தெரிந்திருந்தால் நிச்சயம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருப்பேன்" என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சித் தொடரான 'திருமதி செல்வம்' நாடகத்தில் கதாநாயகி அர்ச்சனாவாக நடித்த அபிதாவிற்கு மாமனாராகப் பூண்டி கதாபாத்திரத்தில் வி.சி.ஜெயமணி நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த மாமனார் - மருமகள் இடையேயான பாசக் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.