நடிகர் கவினுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்... அழகான பெயர்கள் என ரசிகர்கள் புகழாரம்!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் கவின், தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறார். 'டாடா' படத்தின் மூலம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற அவர், அண்மையில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த 'ஹாய்' திரைப்படமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை புரிந்து வருகிறது.

நடிகர் கவின் கடந்த 2023-ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2026-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதியன்று இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்தச் செய்தி வெளியானபோது திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

 


தற்போது தனது இரட்டை குழந்தைகளுக்குச் சூட்டியுள்ள பெயர்களை நடிகர் கவின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, தனது பெண் குழந்தைக்கு “தியோலினா கவின்” என்றும், ஆண் குழந்தைக்கு “தியோன் லியோ கவின்” என்றும் பெயரிட்டுள்ளார்.

குழந்தைகளின் பாதங்களின் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு, அவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.