சாதி, மதமற்றவர் சான்றிதழ் பெற புதிய சட்டம் இயற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் நடிகர் பார்த்திபன் வழக்கு!
சாதி மற்றும் மதமற்றவர் என்ற சான்றிதழைப் பெற விரும்புவோருக்கு உடனடியாக வழங்கிடும் வகையில் சிறப்புச் சட்டம் அல்லது அரசாணையை இயற்றத் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, திரைப்பட நடிகரும் இயக்குநருமான இரா. பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் பார்த்திபன் "சாதி, மதமற்றவர்" என்பதற்கான அதிகாரப்பூர்வச் சான்றிதழைப் பெற்றார். இந்தச் சான்றிதழை நீதிபதி தண்டபாணி முன் பார்த்திபன் காண்பித்தபோது, "நீங்கள் மட்டும் பயனடைந்தால் போதாது, இத்தகைய சான்றிதழைப் பெற விரும்பும் சாதாரணப் பொதுமக்களும் எளிதில் பெற வழிவகை செய்யப்பட வேண்டும்" என நீதிபதி குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே பார்த்திபன் தற்போது பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சாதி, மதமற்றவர் எனச் சான்று கோரி விண்ணப்பிக்கும் மனுக்களை விரைந்து பரிசீலித்துச் சான்றிதழ் வழங்கிட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும். கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதமே இதுதொடர்பான உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த போதிலும், அப்போதைய சூழலில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே நிலவிய சுமுகமற்ற உறவால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் தற்போது அதுபோன்ற சூழல் இல்லாததால், உடனடியாக அரசாணையோ அல்லது தனிச் சட்டமோ இயற்ற உத்தரவிட வேண்டும்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், இந்தப் பொதுநல வழக்கு வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.