நடிகர் பிரகாஷ்ராஜ் தாயார் காலமானார்.. இன்று இறுதிசடங்குகள்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

 

நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் ஸ்வர்ணலதா, உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று காலமானார்.  அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்வர்ணலதா, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி காலமானார். பெங்களூருவில் உள்ள பிரகாஷ் ராஜின் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிரகாஷ் ராஜ் தனது பல நேர்காணல்களில், தனது வெற்றிக்குப் பின்னால் தனது தாயாரின் ஊக்கமும், அவர் வளர்த்த விதமுமே காரணம் என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். "எனது தாய் தான் எனக்குப் பிடித்த முதல் கலைஞர்" என்று அடிக்கடி கூறும் பிரகாஷ் ராஜ், பிஸியான படப்பிடிப்புகளுக்கு இடையிலும் தனது தாயாருடன் நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கமல்ஹாசன்: "நண்பர் பிரகாஷ் ராஜின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். அன்னை ஸ்வர்ணலதாவின் ஆன்மா சாந்தியடையட்டும்" எனத் தனது எக்ஸ்  தளத்தில் பதிவிட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பல கன்னட மற்றும் தமிழ் நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரகாஷ் ராஜ் சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளில் தீவிரமாக இருப்பதால், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்குத் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.

இன்று பெங்களூருவில் உள்ள பிரகாஷ்ராஜின் இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படும் என்றும், ஸ்வர்ணலதாவின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் பிரகாஷ் ராஜின் குடும்பத்தினர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.