நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் "யுவ புரோஸ்கர்" விருது அறிவிப்பு!

 

மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாடமி, 2026-ம் ஆண்டிற்கான "யுவ புரோஸ்கர்" தேசிய விருதை தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நாடக மற்றும் திரைப்படக் கலைஞர் வாகை சந்திரசேகருக்கு அறிவித்து கௌரவித்துள்ளது. இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட பாரம்பரியக் கலைகளில் வாழ்நாள் பங்களிப்பை அளித்து வரும் கலைஞர்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

சிறந்த மேடை நாடகக் கலைஞராகத் தனது கலைப் பயணத்தைத் தொடங்கி, வெள்ளித்திரையிலும் முத்திரை பதித்த வாகை சந்திரசேகர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம் என்ற கிராமத்தில் மே 3, 1956 அன்று பிறந்தார். போரில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூடும் வரலாற்றுப் மரபின் வெற்றிக் குறியீடாகவே, இவருக்குப் பெற்றோரால் 'வாகை' என்று பெயர் சூட்டப்பட்டது.

1980-களில் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் யதார்த்தமான குணச்சித்திர மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்துப் பாராட்டுப் பெற்றுள்ளார். 'நண்பா நண்பா' திரைப்படத்தில் ஆற்றிய சிறந்த நடிப்பிற்காக இவருக்கு ஏற்கனவே தேசிய விருது கிடைத்துள்ளது.

கலைத்துறையோடு நின்றுவிடாமல் தீவிர அரசியலிலும் தடம் பதித்த இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாகவும், சென்னை வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும்  மக்கள் பணியாற்றியுள்ளார்.

கலைத்துறையில் இவரது நீண்ட கால அர்ப்பணிப்பைப் பாராட்டிப் பல்வேறு காலகட்டங்களில் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவருடைய அசாத்திய நடிப்புத் திறனைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு கடந்த 1991-ஆம் ஆண்டிலேயே இவருக்கு மாநிலத்தின் உயரிய 'கலைமாமணி' விருதை வழங்கிச் சிறப்பித்தது.

தற்போது நாடகக் கலையில் இவருடைய ஒட்டுமொத்தப் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி இந்த ஆண்டுக்கான "யுவ புரோஸ்கர்" விருதை இவருக்கு அறிவித்துள்ளது.

நாடகப் பிரிவில் ஒட்டுமொத்தப் பங்களிப்பிற்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மூத்த கலைஞருக்கு இந்தத் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திரையுலகினர், நாடகக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பிலிருந்தும் வாகை சந்திரசேகருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.