“பண்பாடு டிரஸ்ல கிடையாது” - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி!

 

தமிழ மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமி, பெண்களின் ஆடை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் குறித்துச் சமூக வலைதளங்களில் எழுந்துள்ள விவாதங்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

பண்பாடு என்பது ஒரு பெண்ணின் உடல் அமைப்பிலோ அல்லது அவர் அணியும் ஆடையிலோ இல்லை என்றும், நாம் பிற மனிதர்களிடம் நடந்து கொள்ளும் முறையில்தான் அது அடங்கியுள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தான் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி ஒன்றில், அங்கிருந்தவர்களின் கவனம் தன் முகத்தில் இருக்கவில்லை என்றும், மாறாக ஆடை மற்றும் உடல் மீதே இருந்ததாகவும் தெரிவித்த அவர், அப்போது தனது தனிப்பட்ட எல்லைகள் மீறப்பட்டதாக உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

தனக்கு எதிரான கேலிகளையும் விமர்சனங்களையும் முதல் 24 மணி நேரம் சிரித்துக்கொண்டே கடந்ததாகத் தெரிவித்த அவர், நாட்டின் ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) அல்லது கைவிடப்படும் முதியோர்கள் போன்ற மிக முக்கியமான சமூகப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்காமல், ஒரு பெண்ணின் உடல் மற்றும் ஆடை குறித்து ஏன் தீவிரமாக விவாதிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் அண்மையில் வெளியான 'கட்டா குஸ்தி - 2' திரைப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றியடைந்ததும், மலையாளத்தில் வெளியான அவரது 'ஆஷா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.