ரூ.200 கோடி மோசடி வழக்கில் திடீர் திருப்பம் - அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் மனு!

 

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.200 கோடி மனி லாண்டரிங் (Money Laundering) வழக்கில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அப்ரூவராக மாற அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர், மத்திய சட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரி போல நடித்துப் பலரிடம் சுமார் ரூ.200 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த மோசடிப் பணத்தில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்குக் கோடி கணக்கிலான விலை உயர்ந்த வைர நகைகள், சொகுசுப் பைகள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகளைச் சுகேஷ் செய்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நீதிபதி பிரசாந்த் சர்மா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை ஜாக்குலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஒரு முக்கிய மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், இந்த மோசடி வழக்கில் உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவும் ஜாக்குலின் தயாராக இருப்பதாகவும், எனவே அவரை 'அப்ரூவராக' ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜாக்குலினை ஒரு குற்றவாளியாகவே அமலாக்கத் துறை இதுவரை கருதி வருகிறது. அவர் அப்ரூவராக மாறினால், சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான ஆதாரங்கள் மேலும் வலுவடையும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், ஜாக்குலினின் இந்த மனு குறித்து அமலாக்கத் துறை தனது பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.

இந்தத் திடீர் திருப்பம் காரணமாகச் சுகேஷ் சந்திரசேகர் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. ஜாக்குலினின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்குமா என்பதைப் பொறுத்தே இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும்.