"பழிவாங்குறாங்க.." சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஜூலி கண்ணீர் புகார்!
தவெக தலைவர் விஜய் குறித்துக் கருத்து தெரிவித்ததற்காக, தன்னைத் திட்டமிட்டுப் பழிவாங்குவதாகவும், அவதூறு பரப்புவதாகவும் பிக் பாஸ் புகழ் நடிகை ஜூலி சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.
சமீபத்தில் வேலூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தவெக தலைவர் விஜய் ஒரு 'குட்டி கதை' பேசினார். இந்தக் கதையை விமர்சித்து ஜூலி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதற்குத் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் ஜூலியை மிரட்டும் வகையில் பதிவுகள் வெளியானதால், "என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், என் குடும்பத்தை விட்டுவிடுங்கள்" என உருக்கமாக மற்றொரு வீடியோவையும் ஜூலி வெளியிட்டிருந்தார்.
தற்போது ஜூலி அளித்துள்ள புகாரில் மிக முக்கியமான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், "கிட்னி விற்பனை மோசடியில் எனக்குத் தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற பொய்யான வீடியோக்களைச் சிலர் பரப்பி வருகின்றனர். இது எனக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது" என ஜூலி தெரிவித்துள்ளார். தவெக நிர்வாகி ஒருவர் உட்பட மொத்தம் 8 பேர் மீது ஜூலி புகார் அளித்துள்ளார். இவர்கள் திட்டமிட்டுத் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்படும் அந்த 8 நபர்கள் மீதும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.