நடிகை மது மல்ஹோத்ரா காலமானார்... அமிதாப் உட்பட பாலிவுட் பிரபலங்கள் இரங்கல்!

 

பாலிவுட் திரையுலகில் 1980-களில் தனது துடிப்பான நடிப்பால் முத்திரை பதித்த பழம்பெரும் நடிகை மது மல்ஹோத்ரா (72), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1970-களின் இறுதியில் அறிமுகமாகி 80-களில் முன்னணி குணச்சித்திர மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் மது மல்ஹோத்ரா. இவரது திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த சில படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. 

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான சட்டே பே சட்டே (Satte Pe Satta) க்ளாசிக் ஹிட் படத்தில், ஏழு சகோதரர்களில் ஒருவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அதன் பின்னர் ரிஷி கபூர் நடிப்பில் வெளியான கர்ஸ் (Karz) படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. சத்ருகன் சின்காவுடன் இணைந்து நடித்த விஸ்வநாத் படம் இவருக்குப் பாலிவுட்டில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்தது.

கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு மற்றும் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த மது மல்ஹோத்ரா, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மது மல்ஹோத்ராவின் மறைவுச் செய்தியைக் கேட்டு அமிதாப் பச்சன், சத்ருகன் சின்கா உள்ளிட்ட பல மூத்த பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். "80-களின் வண்ணமயமான நினைவுகளில் மது மல்ஹோத்ராவிற்கு எப்போதும் ஒரு இடமுண்டு" என ரசிகர்கள் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.