தொல்லைக் கொடுத்த இயக்குநர்... நடிகை மஞ்சு வாரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!
சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக அவதூறான கருத்துக்களையும் அவப்பெயரையும் பரப்பி வரும் இயக்குநர் சனல்குமார் சசிதரன் மற்றும் யூடியூப் சேனல் ஆசிரியர் ஷாஜன் ஸ்காரியா ஆகியோருக்கு எதிராக நடிகை மஞ்சு வாரியர் தொடர்ந்த வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நடிகை மஞ்சு வாரியர் குறித்து சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் அவதூறான மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த எர்ணாகுளம் நீதிமன்றம், இயக்குநர் சனல்குமார் சசிதரன் மற்றும் யூடியூபர் ஷாஜன் ஸ்காரியா ஆகியோர் அவதூறு கருத்துக்களை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது மஞ்சு வாரியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாந்தி மாயாதேவி வாதிடுகையில், சமூக வலைதளங்களின் வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்தி யார் மீது வேண்டுமானாலும் எதையும் பேசிவிடலாம் என்ற ஆபத்தான போக்கு தற்போது அதிகரித்து வருவதாகவும், இது சட்டப்படி முற்றிலும் கண்டிக்கத்தக்கது மற்றும் தண்டனைக்குரியது என்றும் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.