ரூ.46 கோடி செக் மோசடி புகார்! நடிகை அம்பிகாவிடம் நேரில் விசாரணை நடத்த போலீஸ் திட்டம்
நடிகை ராதா அளித்த ரூ.46 கோடி செக் மோசடி புகார் தொடர்பாக, அவரது சகோதரியும் நடிகையுமான அம்பிகாவை நேரில் அழைத்து விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகை ராதா கடந்த செப்டம்பர் 20-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுன் மீது புகார் அளித்திருந்தார். தனது வீட்டில் வைத்திருந்த கையெழுத்திட்ட 5 காசோலைகளை பயன்படுத்தி, சுமார் ரூ.46 கோடியை எடுக்க முயற்சி செய்ததாக ராதா தனது புகாரில் குற்றம்சாட்டியிருந்தார்.
ராதாவின் புகாரின்படி, கடந்த செப்டம்பர் 17-ம் தேதி தனது வங்கிக் கணக்கில் இருந்து அம்பிகாவின் வங்கிக் கணக்குக்கு பணம் மாற்ற முயற்சி செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து வங்கியைத் தொடர்புகொண்டு அந்த காசோலைகளுக்கான பணப்பரிவர்த்தனையை நிறுத்தியதாக ராதா தெரிவித்திருந்தார்.இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 28-ம் தேதி நடிகை ராதாவிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தகட்டமாக நடிகை அம்பிகாவை நேரில் அழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், ராதா அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யும் அளவுக்கு குற்றச்சாட்டுகள் உள்ளனவா என்பது குறித்தும் போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ராதா தெரிவித்த குற்றச்சாட்டுகளை நடிகை அம்பிகா ஏற்கனவே மறுத்துள்ளார். ராதா தாமாகவே காசோலைகளை வழங்கியதாகவும், குடும்ப சொத்து தொடர்பான பிரச்சினையின் பின்னணியிலேயே இந்த விவகாரம் ஏற்பட்டுள்ளதாகவும் அம்பிகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ரூ.46 கோடி காசோலை விவகாரத்தில் ராதா மற்றும் அம்பிகா தரப்பில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், போலீசாரின் விசாரணைக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும்.