நடிகை ராதிகா சரத்குமாரின் வீட்டுப் பணிப்பெண் மகன் கடத்தப்பட்டு படுகொலை: பொன்னேரி கடற்கரையில் உடல் மீட்பு - நண்பர்கள் 2 பேர் கைது!

 

பிரபல நடிகை ராதிகா – சரத்குமார் வீட்டில் பணியாற்றும் பணிப்பெண்ணின் 19 வயது மகன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, பொன்னேரி கடற்கரையில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (19). இவரது தாய் எழில்செல்வி சென்னையில் உள்ள நடிகை ராதிகா வீட்டில் பணிபுரிந்து வருகிறார். பிரசாந்த் தனது மாமாவுடன் சேர்ந்து டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.

கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி சென்னையில் உள்ள தாயைப் பார்க்கச் செல்வதாகக் கூறிச் சென்ற பிரசாந்த் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது குடும்பத்தினர் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரசாந்தின் செல்போன் அழைப்பு விவரங்களை  ஆய்வு செய்தபோது, சிறுத்துறை கிராமத்தைச் சேர்ந்த தேவராசு (18), தினேஷ் (23) ஆகிய இருவரிடம் கடைசியாகப் பேசியது தெரியவந்தது. இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், நண்பர்களான அவர்கள் பிரசாந்தை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கடற்கரைக்கு வரவழைத்துக் கொடூரமாகக் கொலை செய்து, மணலில் புதைத்ததை ஒப்புக்கொண்டனர்.

கைதான இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பொன்னேரி கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்த பிரசாந்தின் உடலை காவல்துறையினர் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

நண்பர்களையே வரவழைத்துக் கொலை செய்ததற்கான பின்னணி என்ன, பணத் தகராறா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதமா என்பது குறித்துப் புதுப்பேட்டை காவல்துறையினர் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.