தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டும் நடிகை ரோஜா!

 

ஆந்திரப் பிரதேச அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த பிரபல நடிகை ரோஜா, தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

நடிகை ரோஜா கடந்த 1998 ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அக்கட்சியின் மகளிர் அணித் தலைவராகவும் அவர் முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டில் சந்திரகிரி தொகுதியில் போட்டியிட்டும் தோல்வியைத் தழுவினார். அதே ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், பிற்காலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்ட அவர், 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் நகரி தொகுதியில் போட்டியிட்டுத் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். மேலும், ஆந்திர அமைச்சரவையிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவர் தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.