தமிழகம் முழுவதும் நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு!

 

ஆவணி அவிட்டம் மற்றும் பெளர்ணமி தினமான நாளை ஆகஸ்ட் 27ம் தேதி பொதுமக்கள் அதிகளவில் ஆவணப் பதிவு செய்ய ஏதுவாக, அனைத்துச் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.

ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் வழக்கமாக வழங்கப்படும் 100 முன்பதிவு டோக்கன்களுக்குப் பதிலாக 150 டோக்கன்கள் வழங்கப்படும். இரண்டு சார்பதிவாளர்கள் அலுவலகத்தில் வழக்கமான 200 டோக்கன்களுக்குப் பதிலாக 300 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

அதிகப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களில் வழக்கமான 100 சாதாரண டோக்கன்களுடன் கூடுதலாக 50 டோக்கன்கள் சேர்க்கப்பட்டு 150 டோக்கன்களாக உயர்த்தப்படும். வழக்கமாக வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன், கூடுதலாக 4 தட்கல் டோக்கன்கள் பொதுமக்களுக்காக வழங்கப்படும்.

சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் விசேஷ நாட்களில் அதிக ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவணி அவிட்டம், பெளர்ணமி மற்றும் ஹயக்ரீவ ஜெயந்தி இணைந்து நாளை ஆகஸ்ட் 27ம் தேதி மிகவும் மங்களகரமான நாளாகக் கருதப்படுவதால், பத்திரப்பதிவு செய்ய விரும்புவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.