மதுராந்தகத்தில் திமுக ஜெயித்தால் பதவியை ராஜினாமா செய்யத் தயார் - ஆதவ் அர்ஜுனா பகிரங்க சவால்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் களம் அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரத்தால் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக தேர்தல் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விடுத்த சவால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து ஆதவ் அர்ஜுனா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் திமுக தலைமையை நோக்கி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுவிட்டால் தான் வகித்து வரும் தவெக தேர்தல் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று அவர் வெளிப்படையாகச் சவால் விடுத்தார்.
தேர்தல் பிரச்சாரத்திற்குத் தனது தந்தையான முதலமைச்சரைக் கூட அழைத்து வருமாறு சவால் விடுத்த அவர், திமுக தோற்றுவிட்டால் கட்சிப் பதவியில் இருந்து விலக உதயநிதி ஸ்டாலின் தயாரா எனவும் கேள்வி எழுப்பினார்.
70 ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட திமுகவை எதிர்த்து எளிய வீட்டுப் பிள்ளைகளாகத் தவெக களம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மதுராந்தகத்தில் தவெகவை விட திமுக ஒரு ஓட்டு அதிகமாகப் பெற்றுக் காட்டட்டும் எனத் தேர்தல் களத்தை அதிரவைத்துள்ளார்.