ஆதவ் அர்ஜூனா வேட்புமனுவிலும் சிக்கல்... ரூ. 25 கோடி லாபம் ஈட்டும் நிறுவனங்கள் 'மிஸ்ஸிங்'! சொகுசு கார்களை மறைத்தாரா?!
த.வெ.க தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அவருக்கு அடுத்தபடியாகக் கட்சியில் அதிக செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படும் ஆதவ் அர்ஜூனா மீது எழுந்துள்ள இந்தச் சொத்து மறைப்புப் புகார், எதிர்க்கட்சிகளுக்குப் புதிய ஆயுதமாகக் கிடைத்துள்ளது.
கடந்த மார்ச் 30-ம் தேதி வில்லிவாக்கம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ஆதவ் அர்ஜூனா, தனது பிரமாணப் பத்திரத்தில் சில முக்கியத் தகவல்களை மறைத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
ஆதவ் அர்ஜூனாவிடம் உள்ளதாகக் கூறப்படும் Jeep Wrangler, Land Rover உள்ளிட்ட சுமார் 10-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த சொகுசு கார்களின் விபரங்கள் வேட்புமனுவில் இடம்பெறவில்லை எனத் தெரிகிறது.
மனைவி பெயரிலான நிறுவனங்கள்: லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூனாவின் மனைவி பெயரில் உள்ள MARTIN REAL ESTATE, MARTIN PROPERTY DEVELOPERS மற்றும் EXPLICIT TOWERS ஆகிய மூன்று நிறுவனங்களை அவர் மறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிறுவனங்கள் கடந்த 2025-2026 நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ. 18 கோடி முதல் ரூ. 25 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளன. ஆனால், இந்த வருமான விபரங்கள் எதையும் அவர் பிரமாணப் பத்திரத்தில் காட்டவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
வேட்புமனுவில் தவறான தகவல்களை அளிப்பது அல்லது தகவல்களை மறைப்பது ஆகியவை வேட்புமனு நிராகரிப்பிற்கு வழிவகுக்கும். நாளை ஏப்ரல் 7ம் தேதி நடைபெற உள்ள வேட்புமனு பரிசீலனையின் போது, இந்த விவகாரம் குறித்துப் புகார் அளிக்கப்பட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆதவ் அர்ஜூனாவின் மனுவை நிராகரிக்கவும் வாய்ப்புள்ளது. த.வெ.க-வின் முக்கிய வியூக வகுப்பாளரான ஆதவ் அர்ஜூனா மீதான இந்தப் புகார், அக்கட்சியின் அரசியல் முதிர்ச்சியை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.