ஆடிப்பூரம்... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம், கள்ளழகர் கோவில்களில் இருந்து சீர்வரிசை!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோவில் மற்றும் மதுரை கள்ளழகர் திருக்கோவில்களில் இருந்து பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்களச் சீர்வரிசைப் பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூரை வந்தடைந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் இடையே ஆண்டாண்டு காலமாக மங்களப் பொருட்கள் பரிவர்த்தனை செய்யும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் இணை ஆணையர்/நிர்வாக அதிகாரி சிவ ராம்குமார் தலைமையிலான குழுவினர் பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழங்கள் மற்றும் தாம்பூலம் அடங்கிய சீர்வரிசைப் பொருட்களை ஸ்ரீவில்லிபுத்தூருக்குக் கொண்டு வந்தனர்.
மேளதாளங்கள் முழங்க மாட வீதிகள் வழியாக ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட இந்த மங்களச் சீர்வரிசைப் பொருட்களைக் கோவில் செயல் அலுவலர் சௌ. சக்கரை அம்மாளிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
ஸ்ரீரங்கத்தைத் தொடர்ந்து, மதுரை அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் சார்பிலும் ஆண்டாளுக்குப் பட்டு வஸ்திர மரியாதைகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை அக்கோவில் அதிகாரிகள் கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.
ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வுகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகை தந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.