அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ரீல்ஸ் செய்த தவெக நிர்வாகிகள்!

 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள ஓர் அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள், தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகிகள் சிலர் அத்துமீறி நுழைந்து 'ரீல்ஸ்'வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அரசு விதிகளுக்குப் புறம்பாகப் பள்ளி வளாகத்தைப் பயன்படுத்திய தவெகவினரின் இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

உத்திரமேரூர் அடுத்த ஒரு கிராமத்து அரசுப் பள்ளிக்குச் சென்ற தவெக நிர்வாகிகள் சிலர், அங்குள்ள வகுப்பறைக்குள் திடீரென நுழைந்துள்ளனர். பின்னர், அங்கிருந்த கரும்பலகையின் மேல் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் படத்தை மாட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பள்ளி மாணவர்களை அமர வைத்து அவர்களுக்குப் பாடம் எடுப்பது போலப் பாசாங்கு செய்து, அதனைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். பின்னணி இசையுடன் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் 'ரீல்ஸ்' ஆகப் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்எல்ஏ, எம்பி அல்லது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என அரசு சார்ந்த எந்தவொரு அதிகாரப்பூர்வப் பொறுப்பிலும் இல்லாத சில தவெகவினர், தங்களை ஆளுங்கட்சியினர் எனக் கூறிக்கொண்டு பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குள் தன்னிச்சையாக நுழைந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாணவர்களின் கல்வி கற்கும் இடத்தில் தங்களது அரசியல் விளம்பரத்திற்காகப் புகுந்து ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகிகள் மீது கல்வித் துறையும், காவல்துறையும் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.