வீடு புகுந்து பெண்ணைத் தாக்கிய தவெக நிர்வாகிகள்? - பாதிக்கப்பட்ட தாய் கண்ணீர் மல்கப் புகார்!

 

திருவள்ளூர் அருகே சவ ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் வீடு புகுந்து பெண்ணையும் அவரது மகனையும் கொடூரமாகத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியை அடுத்த பாரிவாக்கம் ஊராட்சி, பானவேடுதோட்டம் பிடாரிதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. கடந்த மே 2-ஆம் தேதியன்று இவர்களது வீட்டின் அருகே சவ ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது. அப்போது அந்த ஊர்வலத்தில் மதுபோதையில் பங்கேற்றிருந்த தவெக கட்சியைச் சேர்ந்த சிலர், திடீரென பட்டாசுகளைக் கொளுத்தி சசிகலாவின் வீட்டிற்குள் எறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் பதற்றமடைந்த சசிகலாவின் மகன் அற்புதராஜ், என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கிருந்த கும்பல் அற்புதராஜைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதனைத் தடுத்து தன் மகனைக் காப்பாற்ற முயன்ற சசிகலாவைப் பின்தொடர்ந்து, அந்த கும்பல் வீட்டிற்குள்ளேயே அத்துமீறி நுழைந்துள்ளது. மேலும், சசிகலாவை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவரையும் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட சசிகலா உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் அளித்து பல நாட்கள் கடந்த நிலையிலும், குற்றம் சாட்டப்பட்ட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை இதுவரை எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் சசிகலா, "எங்களைத் தாக்கியவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என ஊடகங்களிடம் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.