கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை... விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் நடப்பு 2026-27 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப அவகாசத்தைத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த தகுதியான மாணவர்கள் இன்னும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை (வேப்பேரி), நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் (தலைவாசல்), உடுமலைப்பேட்டை, தேனி (வீரபாண்டி) ஆகிய 7 முக்கிய இடங்களில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்பிற்கு மொத்தம் 660 இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகின்றன.
4 ஆண்டு கால பி.டெக் படிப்புகள் திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளி, ஓசூர் மத்திகிரி மற்றும் சேலம் தலைவாசல் ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் மற்றும் கோழியின தொழில்நுட்பம் ஆகிய தொழில்முறைப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
நடப்பு 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 25-ஆம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பிற்கு 10,678 மாணவர்களும், பல்வேறு பி.டெக் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 5,356 மாணவர்களும் என மொத்தம் 16,034 பேர் சேர்க்கைக்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்றால், பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ சேர்க்கை இணையதளமான https://adm.tanuvas.ac.in என்ற முகவரியின் மூலம் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
நீட்டிக்கப்பட்ட புதிய கடைசித் தேதி மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை மாணவர்கள் இந்த இணையதளப் பக்கத்தில் முழுமையாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.