அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து... தவெக ஆதரவு விவகாரத்தில் அதிரடி திருப்பம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக-வின் எதிர்கால நகர்வுகள் குறித்து ஆலோசிக்க இன்று நடைபெறவிருந்த அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருந்தது. ஆனால், தவெக-வை ஆதரிப்பதில் கட்சிக்குள் நிலவும் கடும் கருத்து வேறுபாடே இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்குக் காரணம் எனத் தெரிகிறது.
தேர்தல் தோல்வியால் அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துள்ள நிலையில், தவெக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கலாமா என்பது குறித்துத் தலைமை ஆலோசித்து வந்தது. இதற்கு ஒரு தரப்பு ஆதரவு தெரிவித்தாலும், மற்றொரு தரப்பு திராவிடக் கொள்கைகளுக்கு முரணான இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த உட்கட்சிப் பூசல் காரணமாகக் கூட்டத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால், எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தவெக-விற்கு இன்னும் 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அதிமுக-வின் இந்தத் திடீர் பின்வாங்கல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்துப் பரிசீலித்து வருவதால், அதிமுக-வின் அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என்பதில் பெரும் மர்மம் நீடிக்கிறது. வரும் நாட்களில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.