ரூ.1,600 கோடிக்கு கைமாறும் அடையாறு ஆனந்த பவன்?  

 

 

தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமான அடையாறு ஆனந்த பவன் (A2B) உணவக நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை, ஜேம்ஸ் மர்டோக் மற்றும் உதய் சங்கர் இணைந்து நிறுவிய போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம் 180 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.1,600 கோடி) வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இனிப்புக் கடையாகத் தொடங்கப்பட்ட A2B, இன்று தென்னிந்தியாவின் முக்கிய உணவக மற்றும் இனிப்பு, கார வகைகள் விற்பனை நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த முதலீடு நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 160 கிளைகள்

தற்போது A2B நிறுவனம் இந்தியாவில் சுமார் 160 கிளைகளையும், வெளிநாடுகளில் 30-க்கும் மேற்பட்ட கிளைகளையும் கொண்டுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் தனது உணவகங்களை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தில் 15000க்கும்  மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

உலகளாவிய விரிவாக்கத்துக்கு திட்டம்

இந்த முதலீட்டின் மூலம் உணவகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்துவது, சமையலறைகள் மற்றும் உற்பத்தி மையங்களை நவீனப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்த A2B திட்டமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உதய் சங்கர் A2B நிறுவனத்தின் புதிய இயக்குநர் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். எதிர்காலத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடத் தகுந்த நிறுவனமாக A2B-ஐ வளர்ப்பதும் இந்தக் கூட்டணியின் நோக்கங்களில் ஒன்றாகும்.