ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுமழை... 11 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 26 பேர் பலி!
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுக்கு இடையே பல மாதங்களாகவே எல்லைப் பகுதியில் கடுமையான மோதல்கள் நீடித்து வருகின்றன. இந்த மோதலின் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. போர் விமானங்கள் மூலமாக நடத்தப்பட்ட இந்த பயங்கரமான தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில் சமீபகாலமாக தீவிரவாதிகள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் பயிற்சி மையங்கள், வெடிமருந்து கிடங்குகள் மற்றும் தங்குமிடங்கள் என 4 முக்கிய இலக்குகளைத் தங்களது போர் விமானங்கள் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளதாக அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், ஆப்கானிஸ்தானில் உள்ள குனர், கோஸ்ட் மற்றும் பக்திகா ஆகிய மூன்று மாகாணங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வான்வழித் தாக்குதலில் 11 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 13 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் தரப்பு தெரிவிப்பதால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.