ஒகேனக்கல்லில் 13 நாட்களுக்குப் பிறகு பரிசல் சவாரி மீண்டும் தொடக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்ததை அடுத்து 13 நாட்களுக்குப் பிறகு பரிசல் சவாரி மீண்டும் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
கர்நாடகா மற்றும் தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்துச் திடீரென அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாகப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி முதல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், தற்போது அது குறைந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாகியுள்ளது. நீர்வரத்து சீராகியதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று முதல் பரிசல் இயக்க முறைப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 13 நாட்களாகப் பரிசல் சவாரி தடைபட்டிருந்ததால் ஒகேனக்கல்லுக்கு வந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சுற்றுலாப் பயணிகள், தற்போது பரிசல் இயக்கப்படுவதால் அருவிகளை அருகில் கண்டு ரசிப்பதோடு காவிரியில் உற்சாகமாகப் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.