“22 வருடங்களுக்குப் பின் மீண்டும் அதே தவறு...” கமல்ஹாசனுக்கு கிருஷ்ணசாமி பகிரங்க எச்சரிக்கை!
நடிகர் கமல்ஹாசன் அருண்குமார் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு மீண்டும் 'சண்டியர்' என தலைப்பிட்டுள்ளதற்குப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, தமிழகத்தில் இப்படத்தைப் திரையிட விடமாட்டோம் எனப் பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, கமல்ஹாசனின் புதிய படத் தலைப்பு குறித்துக் கடுமையாகச் சாடினார். "முன்பு நிராகரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் தலைப்பை 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத தவறு. ஏற்கனவே அளித்த உறுதிமொழிக்கு மாறாக நடிகர் கமல்ஹாசன் செயல்பட்டு வருகிறார்" எனக் குற்றம்சாட்டினார்.
"எதிர்ப்பை மீறி இந்தத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் எடுக்கவும் முடியாது, திரையரங்குகளில் ஓட்டவும் முடியாது. யாரோ சிலர் கமல்ஹாசனை தவறாக வழிநடத்தி வருகிறார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2004-ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்த திரைப்படத்திற்கு முதலில் 'சண்டியர்' என்றே தலைப்பிடப்பட்டிருந்தது. அப்போது அரிவாள் கலாச்சாரம் மேலோங்கும் மற்றும் சாதிய மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறி டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதன் காரணமாகப் படப்பிடிப்பை நடத்த முடியாமல், படத்தின் தலைப்பை 'விருமாண்டி' என மாற்றி, வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்குப் பதிலாகப் பெரும்பாலான காட்சிகளை அரங்குகளிலேயே கமல்ஹாசன் படமாக்கினார்.
தற்போது 22 ஆண்டுகள் கழித்து, 'வீரதீர சூரன்' பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு மீண்டும் 'சண்டியர்' எனத் தலைப்பிடப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனது நீண்டகாலக் கனவு தலைப்பிற்கு கமல்ஹாசன் மீண்டும் உயிர் கொடுத்துள்ள நிலையில், புதிய தமிழகம் கட்சி மீண்டும் இதற்கு எதிர்ப்புக் கொடி உயர்த்தியிருப்பது திரையுலக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.