தமிழகத்தில் 23 வருடங்களுக்குப் பின் முதற்கட்டமாக 2,500 டாஸ்மாக் கடைகள் தனியார் வசம் ஒப்படைப்பு!

 

தமிழ்நாட்டில் கடந்த 23 ஆண்டுகளாக அரசு நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளில், முதற்கட்டமாக 2,500 கடைகளைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான பரிசீலனைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 4,765 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்த நிலையில், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இருந்த 717 கடைகள் மூடப்பட்டன. தற்போது தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 4,048 சில்லறை மதுபானக் கடைகளும், 3,240 பார்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் முதல் கட்டமாக, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் இயங்கும் நகர்ப்புறக் கடைகள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

கடந்த 2003-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அரசால் டாஸ்மாக் நிறுவனம் முழுமையாக அரசுடைமையாக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த 23 ஆண்டுகளாக அரசுத் துறையாகவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள், தற்போது மீண்டும் தனியார் மயமாக்கப்படவுள்ளது தமிழக அரசியல் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் ஒரு வரலாற்றுச் மாற்றமாகக் பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் பார் உரிமம், போக்குவரத்து டெண்டர்கள், பாட்டிலிங் மற்றும் கொள்முதல் ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததாகவும், இதன் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் தனியார் கணக்கிற்குச் சென்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

சில்லறை விற்பனைக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட  கூடுதலாக ரூ.10 முதல் ரூ.20 வரை வசூலிக்கப்பட்டு, அந்தத் தொகை கட்சிகளின் 'பார்ட்டி ஃபண்ட்' போல சேகரிக்கப்படுவதாகப் புகார்கள் கூறப்பட்டன.

இத்தகைய வருவாய் கசிவுகளைத் தடுத்து, ஊழலை முழுமையாக ஒழிக்கும் நோக்கத்துடன், அரசே நேரடியாக மதுபானங்களை விற்பனை செய்வதற்குப் பதிலாக, கடைகளைத் தனியாரிடம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.