23 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி... டாஸ்மாக் கடைகளைத் தனியாரிடம் ஒப்படைக்க தவெக அரசு முடிவு!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் சில்லறை விற்பனையைத் தனியாரிடம் ஒப்படைக்கத் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2003-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, மக்கள் நலன், வருவாய் பாதுகாப்பு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் மது விற்பனையை அரசு உடைமையாக்கி டாஸ்மாக் நிறுவனத்தை உருவாக்கியது. மதுபான உற்பத்தி, மொத்தக் கொள்முதல் மற்றும் சில்லறை விற்பனை ஆகிய அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் வந்ததைத் தொடர்ந்து, டாஸ்மாக் மாநிலத்தின் முக்கிய வருவாய் ஆதாரமாக மாறியது. 2024-25 நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் அரசுக்கு ₹48,344 கோடி வரை வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு, "டாஸ்மாக் கடைகளை அரசு நடத்துவதில் கண்ணியம் இல்லை" என்ற நிலைப்பாட்டோடு தவெக அரசு சில்லறை விற்பனையைத் தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கி, மாநிலத்தில் உள்ள மொத்தம் 4,048 கடைகளையும் படிப்படியாகத் தனியார் கைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களைப் போலச் சில்லறை விற்பனையைத் தனியாரிடம் கொடுப்பதன் மூலம், அரசுக்கு ஏற்படும் அவப்பெயர்களைத் தவிர்க்க முடியும் என அரசு கருதுகிறது.
இதன் மூலம் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், மதுபான விற்பனையை முதன்மை வருவாய் ஆதாரமாகக் கொண்டு செயல்படுவதைத் தவிர்க்கவும் தமிழக வெற்றிக் கழக அரசு விரும்புவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.