மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - 50 ஆண்டுகளுக்குப் பின் சைக்கிள் ரோந்து சேவை மீண்டும் தொடக்கம்!

 

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகள் மற்றும் சித்திரை வீதிகளில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 50 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையினரின் சைக்கிள் ரோந்து முறை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சுமார் அரை நூற்றாண்டிற்கு முன்பாக நடைமுறையில் இருந்த சைக்கிள் ரோந்து பாதுகாப்பு முறையைக் காவல்துறை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக 5-க்கும் மேற்பட்ட சிறப்புச் சைக்கிள்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டு, சித்திரை வீதிகள் உள்ளிட்ட மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் காவலர்கள் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறுகிய தெருக்களிலும், கூட்ட நெரிசல் மிகுந்த சித்திரை வீதிகளிலும் ரோந்து வாகனங்கள் செல்வதில் உள்ள சிரமத்தைத் தவிர்க்கவும், விரைவாகச் சென்று பக்தர்களுக்கு உதவவும் இந்த முறை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வந்து செல்லும் கோயில் வளாகத்தில் காவலர்களின் இந்த அதிரடி நடவடிக்கை பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.