undefined

பறவைக் காய்ச்சல் பீதி - சென்னை, கடலூரைத் தொடர்ந்து மதுரையிலும் கொத்துக் கொத்தாகச் செத்து விழும் காகங்கள்!

 

சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களைத் தொடர்ந்து, தற்போது மதுரையிலும் காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வருவது பொதுமக்களிடையே பறவைக் காய்ச்சல் குறித்து பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில், இன்று ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன. சமீபகாலமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காகங்கள் உயிரிழந்து வருகின்றன. சென்னை, சேலம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளன. இவற்றை ஆய்வு செய்ததில் 'பறவைக் காய்ச்சல்' தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவிலும் இதே போன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் இது பரவத் தொடங்கியுள்ளது பறவை வளர்ப்போர் மற்றும் மக்களிடையே கவலையை உண்டாக்கியுள்ளது. மதுரையில் காகங்கள் உயிரிழந்த தகவல் கிடைத்தவுடன், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

உயிரிழந்த காகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மேலதிக ஆய்விற்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மற்ற காகங்களின் உடல்கள் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டு, அந்தப் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கோழிப் பண்ணைகள் மற்றும் பறவைகள் அதிகம் உள்ள பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவையின்றி அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ள சுகாதாரத் துறையினர், சில முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர்.

உங்கள் பகுதியில் காகங்கள், புறாக்கள் அல்லது இதர பறவைகள் கூட்டமாகவோ அல்லது அசாதாரணமான முறையிலோ இறந்து கிடப்பதைக் கண்டால், உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்த பறவைகளை வெறும் கைகளால் தொடவோ அல்லது அப்புறப்படுத்தவோ வேண்டாம். பறவைகள் எச்சமிடும் இடங்கள் மற்றும் தண்ணீர் குடிக்கும் இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.