விவசாயம்: பிரம்மாண்ட கிணறு வெட்டி சாதித்த விவசாயி... மீன் பண்ணையும் லாபத்தைக் கொட்டுது!
தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்துப் போகும் நிலையில், மனம் தளராமல் ரூ.15 லட்சம் செலவில் பிரம்மாண்ட கிணறு அமைத்து, தரிசு நிலத்தைச் செழிப்பான விவசாய பூமியாக மாற்றிக் காட்டியுள்ளார் தெலங்கானாவைச் சேர்ந்த விவசாயி மார்த்தா ரமேஷ்.
தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மார்த்தா ரமேஷிற்குச் சொந்தமாக 13 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தனது நிலத்தில் விவசாயம் செய்யத் தண்ணீர் தேவைப்பட்டதால், அடுத்தடுத்து 15 ஆழ்துளைக் கிணறுகளை (Borewells) அமைத்தார். ஆனால், அவை அனைத்துமே தண்ணீர் கிடைக்காமல் முற்றிலுமாகத் தோல்வியில் முடிந்தன. போர்வெல்கள் அனைத்தும் பொய்த்துப்போனதால் கடுமையான பொருளாதார இழப்பையும், மன உளைச்சலையும் அவர் சந்திக்க நேரிட்டது. போர்வெல்கள் கைக்கொடுக்காத நிலையில், பாரம்பரிய முறைப்படி பெரிய அளவில் கிணறு வெட்ட அவர் முடிவெடுத்தார்:
தனது 13 ஏக்கர் நிலத்தின் பாசனத் தேவையைப் பூர்த்தி செய்ய, சுமார் 25 குண்டா பரப்பளவில் 75 அடி ஆழத்திற்குப் பிரம்மாண்டமான முறையில் கிணறு ஒன்றை அமைத்தார். இதற்கு அவர் ரூ.15 லட்சம் வரை செலவிட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட இந்தக் கிணற்றில் தற்போது நாள் முழுவதும் போதுமான நீர் சுரக்கிறது.
இந்த பிரம்மாண்டக் கிணற்றின் மூலமாகத் தனது 13 ஏக்கர் நிலத்திற்குத் தடையின்றிப் பாசன வசதி பெறுவது மட்டுமன்றி, கூடுதலாக மீன் பண்ணையும் அமைத்து ரமேஷ் நல்ல லாபம் ஈட்டி வருகிறார். தொடர் தோல்விகளைத் தாண்டி அவர் அமைத்த இந்தக் கிணறு, தற்போது அவரது விவசாய வாழ்வாதாரத்திற்குப் பெரும் வெற்றியைத் தேடித் தந்துள்ளது.