அடக்கொடுமையே.... ரூ.16,000க்கு 12 வயது மகளை விற்ற தாய்... அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள்!

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெறும் 10 புடவைகள் மற்றும் ரூ.16,000 பணத்திற்காக தனது மகளைப் பெற்ற தாயே விற்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் அர்வல் பகுதியைச் சேர்ந்த கவுரி தேவி என்பவர்தனது 12 வயது மகளை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லஹ்ரு யாதவ் (40) என்பவரிடம் ரூ.16,000க்கு விற்றுள்ளார். கான்ட்ராக்டராக வேலை செய்யும் லஹ்ரு யாதவ் ஏற்கனவே முதல் மனைவி இறந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அந்தச் சிறுமியை வாரணாசியில் உள்ள ஒரு கோயிலில் வைத்து கட்டாயத் திருமணம் செய்து கொண்டார்.

அங்கு கடந்த நான்கு மாதங்களாக சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, வீட்டு வேலை செய்யாத போது சிறுமியைக் கொடூரமாக அடித்தும் துன்புறுத்தி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 19ம் தேதி வாரணாசி ரயில் நிலையத்தில்  சிறுமியை எவ்வித இரக்கமுமின்றித் தவிக்கவிட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பியோடினார்.

இந்நிலையில், ரயில் நிலையத்தில் தனியாக அழுது கொண்டிருந்த சிறுமியை மீட்ட ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவி வர்மா, உதவி செய்வதாகக் கூறி சாரநாத் குளம் அழைத்துச் சென்று, அங்கு சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் பகடியா பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சிறுமியை ஆட்டோ டிரைவர் அழைத்துச் சென்ற நிலையில், அக்கம்பக்கத்தில் வசித்து வந்தவர்கள், ஆட்டோ ஓட்டுநரின் நடத்தை மீது சந்தேகமடைந்த நிலையில், இது குறித்து சாரநாத் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியைப் பத்திரமாக மீட்டு, ஆட்டோ டிரைவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயால் விற்கப்பட்டு அடுத்தடுத்து இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12 வயது சிறுமியின் அவல நிலை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.