undefined

“தேர்தலுக்குப் பின் விருப்பப்பட்டால் கூட்டணியில் தொடரலாம்”.. - எடப்பாடி

 

வானகரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் அடிமையாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியதுடன், அ.தி.மு.க-வின் கூட்டணி அணுகுமுறை குறித்து அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார்.

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, தி.மு.க-வையும் அதன் கூட்டணிக் கொள்கைகளையும் கடுமையாகச் சாடினார்.

"தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த 10 ஆண்டுகளாக அந்தக் கட்சிக்கு அடிமையாகவே கிடக்கின்றன. ஆனால் அ.தி.மு.க கூட்டணி அப்படியல்ல. நாங்கள் தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி அமைத்துள்ளோம். தேர்தல் முடிந்த பிறகு, விருப்பப்பட்டால் கூட்டணியில் தொடரலாம்; இல்லையெனில் கூட்டணிக் கட்சிகள் தாராளமாக அவரவர் கொள்கைப்படி தனித்துவமாகச் செயல்படலாம். அ.தி.மு.க-வை அடிமை என்று சொல்பவர்கள், தி.மு.க காங்கிரஸிடம் மிரட்டப்பட்டு அடிமையாக இருந்ததை மறக்கக் கூடாது" என்றும் அவர் சாடினார்.

"கடந்த 4 ஆண்டுகளில் வராத கோடைக்கால நிதியுதவி இப்போது மட்டும் ஏன் வருகிறது? இது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் பயத்தையே காட்டுகிறது. அ.தி.மு.க அறிவித்துள்ள ₹10,000 உதவித்தொகைதான் உண்மையான சூப்பர் ஹிட். தி.மு.க ஆட்சியில் வீட்டு வரி, கடை வரி மற்றும் மின்கட்டணம் ஆகியவை 50 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

"திட்டங்களைச் செயல்படுத்துவதை விட, அதற்குப் பெயர் சூட்டுவதில்தான் தி.மு.க ஆர்வம் காட்டுகிறது. பெயர் வைப்பதற்கென்று நோபல் பரிசு இருந்தால், அதை ஸ்டாலினுக்குக் கொடுக்கலாம்" என்று எள்ளி நகையாடிவர், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வரும் தேர்தலில் நீடிக்குமா என்பதே சந்தேகமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலில் தி.மு.க-வுக்கு 'பூஜ்ஜியம்' தான் கிடைக்கும் என்றும், அ.தி.மு.க பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 'ராஜ்ஜியம்' அமைக்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.