“அதிமுக தான் தவெக; இரட்டை இலை தான் விசில்” - ஆதவ் அர்ஜுனா இடைத்தேர்தல் வியூகம்!

 

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் ஒன்றுதான் என்று குறிப்பிட்டதுடன், கடந்த ஆட்சியில் கரூர் பிரச்சாரத்தின் போது திட்டமிட்டுச் சூழ்ச்சிகள் நடைபெற்றதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் நடிகர் விஜய் கரூர் சென்றபோது அவருக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படாமல் திட்டமிட்ட சூழ்ச்சி அரங்கேற்றப்பட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார். ஆனால், தற்போது முதலமைச்சரான பின் அவர் அதே கரூர் சென்றபோது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலம் கடந்த காலச் சூழ்ச்சிகள் என்னவென்று பொதுமக்களுக்குப் புரியும் என்றார்.

அதிமுக தற்போது செயலிழந்துவிட்ட நிலையில், பொதுமக்கள் தவெகவைத்தான் உண்மையான அதிமுகவாகப் பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், "இரட்டை இலைதான் விசில், எனவே இரட்டை இலைக்கு பதில் விசிலுக்கு வாக்களியுங்கள், இரண்டும் ஒன்றாகிவிட்டது" என்று தெரிவித்தார்.

ஜெயலலிதாவிற்குப் பிறகு திமுகவை எதிர்த்து நிற்கும் வலிமை தலைவர் விஜய்க்கு மட்டுமே உள்ளதாகத் தெரிவித்த அவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவைப் பார்த்துத் திமுக எவ்வாறு அஞ்சி நடுங்கியதோ, அதேபோன்று தற்போது தலைவர் விஜயைப் பார்த்துத் திமுக பயந்து நடுங்கிக் கொண்டிருப்பதாகக் கூறினார். மேலும், அமைச்சர்களாகிய தனக்கோ அல்லது முதலமைச்சருக்கோ எந்தவித அதிகாரத் தோரணையும் கிடையாது என்றும் அவர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.