தற்கொலை செய்துக்கொண்ட அதிமுக நிர்வாகி மகேந்திரனின் 'கடைசி ஆசையை' நிறைவேற்றிய எடப்பாடி!

 

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கடுமையான உள்கட்சிப் மோதல்களால் மனமுடைந்து, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு தற்கொலை செய்துகொண்ட தஞ்சை வர்த்தக அணி இணைச் செயலாளர் பூக்கடை மகேந்திரனின் உடலுக்கு, இ.பி.எஸ் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுக-வில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரு அணிகளாகப் பிரிந்தனர். எடப்பாடி பழனிசாமி அணியில் 22 எம்.எல்.ஏ-க்களும், சி.வி.சண்முகம் அணியில் 25 எம்.எல்.ஏ-க்களும் அணிவகுத்து நின்றனர்.

இதற்கிடையே, சி.வி.சண்முகம் அணியைச் சேர்ந்த 4 முக்கிய எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்குக் கடுமையான அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர உள்க பேச்சுவார்த்தைகளின் விளைவாக, சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவரைத் தவிர, மீதமுள்ள எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாகச் செயல்படத் தொடங்கினர்.

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், மறைந்த தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு. KAS மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, அவர்தம் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும்… pic.twitter.com/eYmSqy9IvB

— AIADMK (@AIADMKOfficial) June 1, 2026


அ.தி.மு.க மீண்டும் ஒன்றிணைய வேண்டும்: மகேந்திரனின் உருக்கமான கடைசி வீடியோ
தலைமை மட்டத்திலான இந்தத் தொடர் அதிகாரப் போட்டிகளும், உள்கட்சிப் பூசல்களும் அடிமட்டத் தொண்டர்களிடையே கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளது. இதன் உச்சமாகவே, தஞ்சை திருப்பனந்தாளைச் சேர்ந்த பூக்கடை மகேந்திரன் (வயது 32) தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

"அ.தி.மு.க-வில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் உள்கட்சிப் பிரச்சினைகளைப் பார்க்கும்போது, என்னைப் போன்ற எளிய தொண்டர்கள் கடுமையான மன வேதனையடைகிறோம். என் இறப்புக்குப் பிறகாவது அ.தி.மு.க-வின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களது பிளவுகளை மறந்து ஒன்று சேர வேண்டும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும். என்னுடைய கடைசி ஆசையாக, கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேரில் வந்து என் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் நான் அ.தி.மு.க தொண்டனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்," என்று கண்ணீருடன் விடைபெற்றுள்ளார்.

கட்சியின் எளிய தொண்டன் ஒருவன், இயக்கத்தின் ஒற்றுமைக்காகவும், தன் முகத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் உயிரை விட்டுள்ள துயரச் செய்தியைக் கேட்டு நிலைகுலந்த எடப்பாடி பழனிசாமி, இன்று மதியம் தஞ்சை திருப்பனந்தாளுக்கு நேரில் விரைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த மகேந்திரனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து, அவரது கடைசி ஆசையை நிறைவேற்றித் தனது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்தினார். மேலும், மகேந்திரனின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய இ.பி.எஸ், அவரது குழந்தையின் முழு கல்விச் செலவையும் அ.தி.மு.க இயக்கமே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.