மார்ட்டின் மனைவிக்கு சீட்.. காளியம்மாளுக்கு கல்தா... அதிமுக 17 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 127 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாம் கட்டப் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அதிமுக இதுவரை மொத்தம் 150 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக 127 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் மொத்தம் 17 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் வாக்கு வங்கியை ஈர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

லால்குடி தொகுதியில் லீமா ரோஸ் (லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி) போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் ஐஜேகே-வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்டப் பட்டியலில் 46 தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பலருக்கு அவர்களின் சொந்தத் தொகுதிகளிலேயே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே எடப்பாடி தொகுதியிலும், டி.ஜெயகுமார் ராயபுரம் தொகுதியிலும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.