அதிமுக 'மா.செ' தூசி மோகன் தவெக-வில் ஐக்கியம் - செய்யாறு தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு!
திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராகக் கருதப்பட்ட தூசி கே. மோகன், தவெக-வில் இணைந்து அக்கட்சி சார்பில் செய்யாறு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சித் தாவிய சில நிமிடங்களிலேயே அவரை அதிமுகவிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த தூசி மோகன், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் செய்யாறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், அதிமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தியில் இருந்தார்.இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற தவெக வேட்பாளர் அறிமுக விழாவில், அதிரடியாகத் தவெக-வில் இணைந்த அவருக்கு, அவர் கேட்ட செய்யாறு தொகுதியையே வேட்பாளராக ஒதுக்கி விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தூசி மோகனின் இந்த முடிவை அடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தூசி கே. மோகன் விடுவிக்கப்படுகிறார். அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் அதிமுகவினர் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது."
தூசி மோகன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூசி மோகன் ஏற்கனவே 2016-ல் இதே தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பதால், தற்போது தவெக சார்பில் அவர் களம் இறங்குவது செய்யாறு தொகுதியில் கடும் மும்முனைப் போட்டியை உருவாக்கியுள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கியை அவர் பிரிப்பாரா என்பது அரசியல் வட்டாரத்தில் விவாதமாகியுள்ளது.