அதிமுகவில் தொடரும் ராஜினாமா... அறுதிப் பெரும்பான்மையைக் குறிவைத்து இடைத்தேர்தலுக்குத் தயாராகும் தவெக!

 

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத அசுர வேக அரசியல் நகர்வாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளனர்.

சட்டமன்றத்தில் கூட்டணி அரசு நடத்தி வரும் தவெக, இந்த அதிரடி ராஜினாமாக்கள் மூலம் தனித்து அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கான மாபெரும் அரசியல் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பு என இரு அணிகளாகப் பிரிந்து கிடக்கும் அதிமுக உட்கட்சிப் பூசலைப் பயன்படுத்திக் கொண்டு, தவெக இந்த அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.  மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார், மற்றும் தாராபுரம் தொகுதி சத்யபாமா ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏ-க்களும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்துத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களிலேயே, அவர்கள் மூவரும் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர். இந்த 3 பேரைத் தொடர்ந்து, அதிருப்தியில் உள்ள மேலும் சில அதிமுக எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிரடித் தகவல்கள் கசிந்துள்ளன.

கூட்டணி கட்சிகளின் தயவோடு ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்தில் தனது கட்சியின் பலத்தை அசுரத்தனமாக உயர்த்த இந்த ராஜினாமா உத்தியைப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. எம்.எல்.ஏ-க்களைக் கட்சி தாவ வைத்தால் 'கட்சித் தாவல் தடைச் சட்டம்' பாயும் என்பதால், அவர்களைப் பதவியையே ராஜினாமா செய்ய வைப்பதுதான் தவெகவின் திட்டம். இதன் மூலம் காலியாகும் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் கொண்டு வரப்படும்.

இடைத்தேர்தல் நடக்கும் போது ஆளுங்கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்தி, ராஜினாமா செய்த அதே 3 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை (அதே முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்) பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது. இந்த இடைத்தேர்தல் வெற்றிகள் மூலம் சட்டமன்றத்தில் தவெகவிற்குத் தனித்து அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும். அதன் பிறகு கூட்டணி கட்சிகளின் எவ்வித அழுத்தங்களுக்கும் பணியாமல், தவெக தனித்துத் தன்னிச்சையாக ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சியைத் தொடர முடியும் என்பதே முதலமைச்சர் விஜய்யின் மாஸ்டர் பிளான் ஆகும்.

புதிய அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே எதிர்க்கட்சியைச் சிதறடித்து, இடைத்தேர்தலைச் சந்திக்கத் துணியும் தவெகவின் இந்த அதிரடி அரசியல் பாய்ச்சல், தமிழக அரசியல் களத்தை உச்சி முகர வைத்துள்ளது.